நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 19 December 2014

சங்காலத்தில் போரும் அமைதியும் பாகம் -2


சங்காலத்தில் போரும் அமைதியும் பாகம் -2

பகை என்னும் பெரு நோய்

இரு அரசுகளுக்கிடையே ஏற்படும் பகையை ‘நோய்’ என்கிறார் (851) வள்ளுவர். அதுவும் எத்தகைய நோய்? ஒருவரது பண்பையே அழிக்கும் பெருநோயாகும். இந்த நோய் பகை கொண்டவரின் பண்பை மட்டுமா அழிக்கும்? மனிதர்களின் உண்மை குணத்தையே அழிக்கும் நோயாகும். ‘பகை’ தன்னைக் கொண்டவரை மட்டுமன்றி , அவரது சுற்றத்தைப் பாதித்து , மக்களைப் பாதித்து, இன்னொரு நாட்டு மன்னனையும் மக்களையும் பாதித்து இரு நாட்டிற்கும் பெரும் போரை ஏற்படுத்திவிடும். இதில் ஒருபாவமும் அறியாத விலங்குகளும் சேர்ந்து அழியும்.
Image result for பகைவன் 

இந்தப் பகை என்னும் நோயானது, மக்களிடம் உள்ள புன்னகையைக்கூட வேரோடு அழித்துவிடும் வல்லமையுடையது. எனவே நாடாள விரும்பும் ஒவ்வொரு மன்னனும், தன் மனதிலுள்ள பகையை முதலில் வேரோடு கிள்ளி எறிந்து, அன்பு என்னும் விதையை விதைக்க வேண்டும். தன்நாட்டு மக்களைப்போல உலக மக்களைக் காணும் பெருநோக்கினைப் பெற வேண்டும். வாள் வலிமையும், தோள் வலிமையும் வலிமையல்ல. அன்பென்னும் வலிமையே அனைத்தினும் வலிமையுடையது என்ற எண்ணம் உறுதிபெற வேண்டும். அத்தகைய எண்ணம் உள்ள மன்னனே ‘உலகாளும் தகுதி படைத்த மன்னன்’ ஆக முடியும். ஆம், உலகினை ஆள விரும்பும் மன்னன், முதலில் பகையை கிள்ளி எறியவேண்டும்.பின்பு, உலகை அன்பால் ஆள வேண்டும்.


பிற அரசுகளோடு ஒத்துப்போக முடியாத சூழல், ஒவ்வொரு அரசிற்கும் எப்போதாவது ஏற்படும். இச்சூழலில் பூசல் ஏற்பட்டு, பகை தோன்றும். இப்பகையானது வலிமையைப் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. இதனால் ஒருவர் வலிமையை மற்றவர்க்குக் காட்டி முனைகின்றனர். போர் என்பது பகையின்முற்றிய நிலை. அதனால் அதனை முற்றவிடாமல், ஒத்துப்போக முடியாத சூழல் ஏற்படும் பொழுதே மாற்றான் தன்னைவிட வலிமையானவனாக இருப்பின், இணங்கியும் வணங்கியும் சென்று போரைத் தடுத்து விடவேண்டும் . தம்மையும் அரசையும் தம் நாட்டு மக்களையும் காக்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவன் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். தன் செருக்கை விடுத்து இவ்வாறு விட்டுக்கொடுத்து பணிந்து போவது இழுக்கல்லஎன்பதை உணரவேண்டும். தன்னைவிட வலிமையுடையாரை இகழ்ந்து சிக்கலை மிகுதிப்படுத்தி, போரை வலிய மக்களின் மீது திணிப்பவன் நல்ல அரசன் அல்ல. எனவே, ‘இளைதாக முள் மரம் களைக ’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப பிற அரசுகளோடு ஒத்துப்போக முடியாத சூழலில் தன் வலியறிந்தும், மாற்றான் வலியறிந்தும் ஒருவன் முளையிலேயே தன் மனதிலுள்ள சினத்தை நீக்கி, பகையைத் தவிர்த்துவிட வேண்டும்.
Image result for பகைவன் 


‘செல்லிடத்துக்காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின் என் காவாக்கால் என்’ என்பார் வள்ளுவர். தன் சினம் செல்லுபடியாகிற இடத்தில் சினத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். செல்லுபடி ஆகாத இடத்தில் சினத்தைக் காட்டி என்ன பயன்? காட்டாவிட்டால் தான் என்ன பயன்?என்று கேட்கும் வள்ளுவர், சினத்தை எங்குமே வெளிக்காட்டக் கூடாது என்கிறார்.
 

தன்னைவிட வலிமையுடையாரோடு ஒருவன் பூசல் கொள்ளாமல், பணிந்து, விலகி, பகைவர் மீதுள்ள மீதுள்ள சினத்தைத் தவிர்த்து,இணங்கியும் வணங்கியும் செல்லக்கூடிய,  தன் மக்களைக் காப்பாற்றக் கூடிய ஒருவனை உலகம் போற்றுமேயன்றி தூற்றாது. பகையைக் கைவிட்ட ஒரு அரசனை எந்த அரசும் தோற்கடிக்க முடியாது. பகையை விடுத்த மன்னனே உலகம் விரும்பும் மன்னன் ஆவான்.

பகை என்னும் ‘பண்பழிக்கும் நோய்’ பற்றாத நாடே வளநாடாகும். பகை என்னும் நோயை நீக்கிய பண்புடைய மன்னனே புலவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றிருக்கிறான். இந்த உலகம், ஒரு மன்னனிடம் வீரத்தை விடப் பண்பையே பெரிதும் எதிர்பார்க்கிறது. எனவேதான், புறநானூற்றுப்பாடல், ' மன்னர்களைப் பார்த்து,
""
நல்லது செய்தால் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'' (புறம் 195) என்ற வரிகள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும், தேவையில்லாமல் பிற மன்னரிடம் பகை வளர்த்து, கெடுதலைச் செய்யாமல் இருங்கள் என்கிறது. பகை யாரைப் பற்றும்? பண்பற்றவரையே பற்றும். அப்படி ஒருவேளை போர் மூண்டுவிட்டால், அந்தப்பகையை எப்படி நீக்குவது? போர் மூலம் பல உயிர்கள் அழியும் முன்னரே நட்புக்கரம் நீட்டி அப்பகையை நீக்கி, நாட்டில் அமைதி நிலவச் செய்ய வேண்டும்.

இருப்பினும், புலவர்கள் போரை விரும்பவில்லை என்பதற்காக மன்னர்கள் போர் தொடுக்காமல் இருப்பதில்லை. பண்பை மறந்து போர் தொடுக்கவே செய்கின்றனர். இந்நிலையில் மாற்றரசுகளோடு போர் புரியும் அவர்களின் செயல்களினால் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்து, மக்கள் நிலையை உணர்த்தி அவனைப் போரைக் கைவிடச் செய்ய புலவர்கள் முயல்கிறார்கள். பகையை நீக்கி பண்பை வளர்க்கும் நல் அறிவுரைகளைத் திரும்பத் திரும்ப எடுத்துரைக்கிறார்கள். பண்பின் பெருமைகளை, அறத்தின் வலிமைகளை எதிரும்ப திரும்பகூறுகிறார்கள். அரசனை நல்வழிப்படுத்த பாடுபடுகிறார்கள்.
.

.புலவர்,கிள்ளிவளவனிடம் நீயோ போரை விரும்பி, பகைவர் காவல் மரங்களை வெட்டுகிறாய். ஆனால் உன் பகைவனோ காவல் மரங்களின் ஓசையைக் கேட்டும் போரிட வராது, தன் மாளிகையிடத்தில் இருக்கிறான். அவன் உன்னுடன் போரிட அஞ்சியே அவ்வாறு இருக்கிறான். ஒரு வேளை கோட்டைக் கதவுகளை உடைத்து, நீ பகைவன் நாட்டிற்குள் நுழைந்து பகைவனைக் கொல்லலாம். அல்லது கொல்லாமலும் விடலாம். எதுவாயினும் ஒரு கோழையோடு தான் போரிடப் போகிறாய். போர் தொடுக்க வந்துள்ள நீ அவனுடைய, காவல் மரங்களை வெட்டுகிறாய், படைகளை முறைப்படி நிற்க வைக்கிறாய், படைகள் தங்க கூடாரங்களை அமைக்கிறாய். உன் நாடு விட்டு இங்கு வந்து உன் படைகளும், ஒவ்வொரு நாளும் இன்று போரிடுவோம் எனக் காத்துக் கொண்டுள்ளன. அவர்கள் பகைவர்கள் தலையை வெட்ட வேண்டும் என்ற வேகத்தில் உள்ளனர். ஆனால் இங்கு மரங்களின் தலையைத்தான் வெட்டிக் கொண்டுள்ளனர். வலிமை படைத்த அவர்களின் தோள்கள், மாற்றான் நாட்டில் படைக்களத்தை உருவாக்கிக் கொண்டுள்ளன, கோடாரியால் காவல் மரங்கள் வெட்டப்படும் ஓசை கேட்டும், உன் பகைவன், தன் அரண்மனையில் பாதுகாப்பாக இனிமையாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான். சிறிதும் நாணமில்லாத அவனிடம் பகை கொண்டு போரிடத்துணிந்தாய், உன் வீரர்கள் பொருநையாற்று மணல் மேட்டிலே உள்ள மரங்களை வெட்டிக்கொண்டுள்ளனர். அங்குதான் இந்நாட்டுச் சிறுமிகள் கழற்சிக்காய்களை வீசி விளையாடுவர். தற்போது அவர்கள்விளையாடும் அம்மணற்பரப்புச் சிதையுமாறு நெடிய கைப்பிடியுடைய கோடரியினால் வீரர்கள் மரங்களை வெட்டிக் கொண்டுள்ளனர். தன்நாட்டு மக்களைப் பற்றியும், அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் துன்பத்தைப் பற்றியும், சிறிதும் நினைக்காத உன் பகைவன் பண்பற்றவன். அத்கைய பண்பற்றவனோடு தான் போரிடப் போகிறாயா? அப்படிப்பட்டவனோடு நீ போரிட்டு பெறுவது என்ன? உலகம் உன் வெற்றியை எப்படிப் பார்க்கும்? எனவே, இந்த முற்றுகையைக் கைவிட்டு உன் நாடு திரும்புவாயாக என்று அறிவுறுத்துகிறார்

அரசியல் தொடர்பான பெரிய முடிவுகளில் ஒரு எளிய புலவர் தலையிடலாமா? புலவர் கருத்திற்கு போர்க் காலங்களில் மதிப்புண்டா?போர் தொடுக்க முடிவெடுத்துப் படைதிரட்டி போர்க்கோலத்துடன் நிற்கும் சினம் கொண்ட மன்னனின் முன் துணிந்து நின்று ஒரு எளிய புலவரால் எப்படி அறிவுரை கூறி நிற்க முடிந்தது?

.சங்க காலத்தில் புலவர்கள் வறுமையில் வாடியுள்ளனர். எனினும் யாரிடமும் சென்று பொருளை யாசித்ததில்லை. யாசித்து நிற்றலை சங்க இலக்கியம் ‘இரவல்’ என்ற சொல்லால் குறிக்கிறது, யாசிப்பவர் இரவலர். புலவர்கள் இரவலர்களா? தொல்காப்பியம், ஈ, தா, கொடு என்று மூன்று சொற்களால் குறிக்கிறது, (நுற்பா 444)
ஈ - வறுமையுற்றோர் - செல்வந்தரிடம் சென்று ஒரு பொருளைக் கேட்டு ‘ஈ’ என இரங்கி கேட்டு என நிற்பது,
தா - தனக்குச் சமமானவர்களிடம் சென்று ஒருபொருளை ‘தா’ என உரிமையுடன் கேட்டு நிற்பது,
கொடு - உயர்ந்தோர்/தாழ்ந்தோரிடம் ஒரு பொருளை ‘கொடு’ எனக் கேட்டுப்பெறுவது
இங்குப் புலவர்களுக்கு உரியது எது? புலவர்‘அவர்’ என்றும் அரசன் ‘அவன்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர், ‘அவனை அவர் பாடியது’ என்று மன்னரைவிடப் புலவர் உயர்ந்தவர் என்ற கருத்து நிலவியுள்ளது.ஔவையார், தனக்குப் பரிசு கொடுக்காமல், காலம் நீட்டித்துத் தாமதப்படுத்திய அதியமானை பார்த்து கோபமுடன் ‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ எனப் பரிசைப் புறக்கணித்துக் கிளம்ப முயல்கிறார். அதியனும் அவர்மீது கொண்ட பேரன்பினால், அவரைத் தன் நாட்டிலேயே இருக்க வைக்க அவ்வாறு காலம் தாழ்த்தியதாகக் கூறி மன்னிப்பு கேட்டு பரிசு தருகிறான்.


Tuesday, 18 November 2014

கோவையில் ஒரு நாள் கவிதைக் கருத்தரங்கு

தமிழ்த் தாராமதி இதழின் ஆசிரியர் பூ.அ.இரவீந்திரன் அவர்களால்  நடத்தப் பெற்ற கோவை இடையார் பாளையம் காந்தி கல்வி நிறுவனத்தில் கவிஞர்கள்,திறனாய்வாளர்கள்,சிற்றிதழ் ஆசிரியர்கள் பங்கு கொண்ட கவிதைத் திருவிழா


புலம் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைப் பாடுபொருள் குறித்து நான் உரையாற்றினேன்


பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் சி.மா இரவிச்சந்திரன்

3 கவிஞர்கள்,துபாய் சந்திரசேகரன்,நான்

Monday, 17 November 2014

சேலம் அம்மாப்பேட்டை காளியம்மன் கோவில் கந்தச் சத்தி விழா






அழகன்... குமரன்... முருகன்... சேயோன்...வேலன்..

முருகன் வழிபாடு குறித்து.....பேரா.முனைவர் கோ. வல்லரசி அவர்கள்....


வேலும் மயிலும்... என்ற தலைப்பில் உரை........

Thursday, 13 November 2014

அழகே அழகே . . . . . தேவதை


அழகே அழகே . . . . .  தேவதை

              அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தாள் விமலா. அவளுடைய கல்லூரி விடுதி வாழ்க்கை ஆரம்பித்தாகி விட்டது. எல்லாமே அவளுக்குப் புதுமையாகத் தெரிந்தன. முன்பே இளங்கலைப் பாடத்தைத் தன் சொந்த ஊரில் படித்திருந்தாள். இப்போது முதுகலை படிக்க கோவை வந்திருந்தாள்.
 நான்கு மணிநேரம் பயணம் செய்து புதிய ஊரில் அதுவும் தங்கிப் படிக்கும் ஒரு கல்லூரியில் படிக்க வந்திருக்கிறாள். அவள் இளங்கலையில் பெற்ற மதிப்பெண்கள், அவள் படித்த கல்லூரி அவளைப் பாராட்டி பேசிய பேச்சுக்களைக் கேட்டதினால் மனம் நெகிழ்ந்த அவள் தந்தை தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு அவளை தொலைதூரத்திற்கு படிக்க அனுப்ப சம்மதித்திருக்கிறார். அவளுக்கு படிப்பைவிட இன்னும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய எண்ணம்.  

             பாவாடை தாவணி போட்டிருந்த அவளை வராண்டாவைத் தாண்டிச் சென்ற சுடிதார் போட்ட மாணவர்கள் ஒருவிதமாகப் பார்த்துச் செல்வதை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஒருவழியாக அவளுக்கு அறை ஒதுக்கப்பட்டு விட்டது. இருபேர் தங்கும் அறை இன்னொரு மாணவி யாரென்று தெரியவில்லை. அப்பா பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்வதை கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அறைக்குத் திரும்பினாள்.
            பூட்டிய அறை திறந்திருந்தது. திகைத்துப் போய் உள்ளே வேகமாக நுழைந்தாள். உள்ளே இருந்த பெண்ணைப் பார்த்துத் திகைத்துப் போனாள். ஓல்லியாக உயரமாக அழகாக நல்ல ரோஜாப்பூ வண்ணத்தில் ஒரு பெண் கண்ணாடி முன் நின்றிருந்தாள். அழகோ அழகு. விமலாவிற்கு வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை. கண்ணாடியில் தெரிந்த விமலாவின் பிம்பத்தைக் கண்டு, இந்த ரூமில்தான் தங்கியிருக்கிறேன். எம்.எஸ்.ஸி பிலாக்ஸ். நீங்க. . . . . ""என்றாள் முகம் நிறைய புன்னகையுடன். விமலா சுய நினைவிற்கு வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அன்றிலிருந்து விமலாவிற்கு நன்றாகப் பொழுது போகியது. ஸ்ருதி கலகலப்பாக பேசினாள். அவளைத் தேடி பக்கத்து அறைகளிலிருந்து தோழியர் வந்தனர். விமலாவையும் தன் தோழியர் அறைக்கு அழைத்துச் சென்றாள். ஓரிரு நாட்களிலேயே அனைவரும் தெரிந்தவர்களாகி விட்டனர். 

          ஸ்ருதியிடம் ஒரு பழக்கம் எப்போதும் ‘மேக்கப்புடன்’ இருப்பது. காலையில் குளித்து மேக்கப் ஒருமணிநேரம் நடக்கும். அத்தனை விதமான கிரீம்களை விமலா பார்த்ததே இல்லை. ஒவ்வொரு கிரீமிற்கும் ஒரு பயனைச் சொன்னாள். விமலாவிற்கு ஒரு விசயம் புரியவில்லை. ஸ்ருதி மிகவும் அழகான பெண். எதற்கு இத்தனை அலங்காரம்? விமலா தன் குடும்பத்தை நினைத்துக் கொண்டாள். பெற்றோரிடம் விலை அதிகமான ஒரு புத்தகத்தைக் கேட்பதற்குக் கூட அவள் தயங்கினாள். அவள் விடுதியில் தங்கிப் படிப்பதற்கும், பயணச் செலவிற்குமே அவள் குடும்பம் தடுமாறிக் கொண்டிருந்தது. உதவித் தொகை கிடைக்குமா எனக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தாள்.
             அன்றிலிருந்து மூன்றுமாதம் பொழுது போனதே தெரியவில்லை. புதிய கல்லூரி. புதிய ஆசிரியர்கள், புதிய பாடமுறை, புதிய நண்பர்கள் என கல்லூரியும் கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை ஸ்ருதி கேட்டாள். அருகிலுள்ள முருகன் குடிகொண்டுள்ள மலைக்கு சென்று வரலாமா என்று, விமலா மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டாள். இரண்டு கி.மீ. தூரம்தான் என்பதால் காலைவேளை நடந்தே சென்றார்கள். நடைப்பயணம் இனிய பயணமாக இருந்தது. பேருந்துகளும், வண்டிகளும் சர் சர் எனத் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தன. மலையடிவாரம் வந்து சேர்ந்துவிட்டார்கள். மலைச்சரிவில் ஒரு இடையன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். பெரியதும் சிறியதுமாக பல ஆடுகள். விமலா குட்டி ஆடுகளை பார்த்து ஸ்ருதியிடம் காட்டினாள். 

           ‘பார் சுருதி அந்த குட்டி ஆடுகள் எவ்வளவு அழகாகத் துள்ளிக் குதிக்கின்றன. எவ்வளவு அழகு’ அவள் மனம் நிறைந்துவிட்டது. தன் கிராமத்தில் இருப்பது போல் உணர்ந்தாள். அவளுக்கு அந்த கல்லூரியில் ஒரு இடர்ப்பாடு இருந்தது. மற்ற மாணவிகளைப் பார்க்கும் பொழுது தான் மிகச் சாதாரணம் அழகிலும் வசதியிலும் என்று தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஸ்ருதி தனக்குத் தோழியாகக் கிடைத்ததை பெரும் பாக்கியம் என நினைத்திருந்தாள். மிகச்சிறந்த அழகியும், நாகரிகமுள்ள நடத்தையும் கொண்டிருந்த ஸ்ருதியுடன் இருப்பதால் தன் செல்வாக்கும் உயர்ந்து விட்டதாக நினைத்துச் சமாதானப்படுத்தக் கொண்டிருந்தாள். ஸ்ருதி அழகாக தன்னை அலங்கரித்துக் கொள்வதைக் கூட இரசித்துப் பார்ப்பாள். என்னதான் ஸ்ருதி அழகாக இருந்தாலும், தன் அழகை எவ்வளவு நேரம்தான் கண்ணாடியில் நின்று பார்க்க முடியும்? ஆனால் அவள் அழகை அவளுடனே இருப்பதால் தான் பார்த்து இரசிக்க நிறைய நேரமிருப்பதால் தானே அதிர்ஷ்டசாலி என விமலா நினைத்துக் கொண்டிருந்தாள். 

       இந்த அழகிய மலையடிவாரத்தில் அழகிய குட்டி ஆடுகளைப் பார்த்ததும் விமலாவின் மனம் மிகவும துள்ளியது. இனிமையான காற்றும், பச்சைப் புல்வெளிகளும் அவளை மெய்மறக்கச் செய்திருந்தது. அப்போது ஸ்ருதி சொன்னாள். ‘ஆமாம் அழகான குட்டி ஆடுகள். இதை சமைச்சு சாப்பிட்டா ரொம்ப ருசியாயிருக்கும். இளங்கறி வறுவல்னா எனக்கு உசிரு’ என்றாள். விமலா காலடியில் எதுவோ நழுவுவதுபோல் இருந்தது. விக்கித்து நின்று விட்டாள். அப்போது அவர்களைக் கடந்த வண்டியிலிருந்து ஒரு பாடல் வழிந்து அவள் காதுகளில் நிறைந்தது. ‘நான் யார் என் உள்ளம் யார். . . .’