மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது. . . .
தலைவன் திருமணம் பற்றிய
எண்ணமின்றி தலைவியைத் தொடர்ந்து சந்தித்து வருகிறான். இவர்களுடைய பழக்கம்
ஊராருக்குத் தெரிந்து விட்டது. ஊரெல்லாம் இவர்களைப் பற்றி அலர் பரவி தலைவி வெளியே
தலைகாட்ட முடியாத நிலை. எனினும், தன் வருத்தத்தை அவள் தனக்குள் மறைத்துக்
கொண்டாள். தாயினால், தலைவனைச் சந்திக்க இயலா நிலையை அடைந்தாள். இதையறியா தலைவன்
தலைவிக்காகக் காத்திருந்து காத்திருந்து அவள் வாராமையினால் சோர்ந்திருந்தான்.
இருவர் நிலையுமறிந்த தோழி தலைவனை சந்திக்கின்றாள். அங்கு தலைவியின் நிலையே
தலைவனிடம் கூறுகிறாள். “நான் வரும் வழியில்
இரண்டு பெரிய குன்றுகள். எதிர் எதிராக உள்ளன. இரண்டிற்குமிடையே பெரியதொரு
பள்ளத்தாக்கு.
அப்பள்ளத்தாக்கிலே ஒரு வானுயர்ந்த வேங்கை மரம் பூத்துக் குலுங்கி
நிற்கிறது. குன்றுகளிலிருந்து பெருகி வரும் அருவிலிருந்து நீர்த்துளிகள்
அம்மரத்தின் மீது விழுந்து தெரிக்கிறது. இதனால் அம்மரம் செழிப்புற்று ஓங்கி
வளர்ந்திருக்கிறது.இக்காட்சியைப் பார்த்தவுடன் எனக்கு தலைவி அந்த வேங்கை மரமாகவும்,
உன்னுடைய சுற்றமும்,
தலைவியின்
சுற்றமும் அந்த குன்றுகளாகவும் தோன்றியன. இரு குன்றுகளிலிருந்தும் பெருகி வருகின்ற
நீர் வேங்கை செழிப்பதற்குக் காரணமாகியிருப்பதைப் போல, நின் சுற்றமும் அவள் சுற்றமும்
அவள் மீது அருளாகிய நீரைப் பொழிவது எந்நாளோ என்று ஏங்கியிருந்தேன். என் ஏக்கம்
தீர்ப்பது போல நீயும் வந்தாய்.
உன் மீது கொண்ட காதல் நோய் ஒரு புறம் அவளை வாட்டுகிறது. மறுபுறம் ஊராரின் அலர்
அவளைத் துன்புறுத்துகிறது. எனினும் தன்னுடைய வருத்தத்தை அவள் என்னிடம் கூட
சொல்லவில்லை. நீ அவளிடம் அருளில்லாமல் நடந்து வருவதை என்னிடமும் கூறாமல்
மறைத்தாள்.
தலைவியின் துயர் கண்டு அவளுடைய துன்ப நிலைக்கு நீயே காரணமென்று நான் உன்னைப்
பிறருக்கு முன் பழித்துவிடுவேனோ என்று அஞ்சியே அவள் மறைத்து விட்டாள்.
அது மட்டுமின்றி ஊரில் அலர் எழும்பொழுது அவள் ஊரில் உள்ள மக்கள், உன்னை தெரிந்து கொள்ள
இயலா வகையில் தன் சுற்றத்தாரிடமும் மறைத்தாள். உன் அருளின்மையைக் கேட்டு மக்கள்
உன்னை எங்கே தூற்றி விடுவார்களோ என்று நாணியே அவள் உன்னைக் காட்டிக் கொடுக்காமல்
மறைத்தாள்.
உன்மீது கொண்ட அன்பு மிகுதியினாலும், நீ தந்த பிரிவினாலும் வெகு துன்பமடைந்த அவள், தன் மேனி வாட்டத்தையும்
மறைத்தாள். நீ செய்த அருளின்மையை உடன் விளையாடும் தோழியர்க்குக்
கூடத் தெரியாமல் மறைத்து விட்டாள். திருமண நினைவின்றி கனவிலேயே வாழ நினைக்கும் உன்
பண்பு கெட்ட தன்மையைப் பிறர் அறியாதபடி அவள் மறைத்த காரணம் உன்னைப் பிறர்
இகழ்வார்களோ என்று நாணத்தினால் அன்றோ?
தன்னைத் தீமையும் துன்பமும் சூழ்ந்தபோதும் உன்னைக் காட்டிக் கொடுக்காமல்
நெருங்கிய தோழியாகிய என்னிடமும் மறைத்தாள். இத்தகைய அரிய பண்புடைய தலைவியின்
வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தே நீ தான். நாம் இனியும் காலந் தாழ்ந்தாது திருமண
ஏற்பாடு மேற்கொள்ள விரைந்து செல்வோம்’ என்று தோழி கூறுகிறாள்.
இங்கு விரைந்து செல்வோம் என்று தன்னையும் சேர்த்துக் கூறியது தலைவியின்
தரப்பில் நான் ஏற்பாடு செய்கிறேன். உன் தரப்பில் நீ ஏற்பாட்டை விரைந்து செய்
என்பதற்கேயாம்.
வேங்கையையும் மங்கையையும் குறித்த கபிலரின் அப்பாடல் ...
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட
நனஞ் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து, அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ, முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை, வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, |
5
|
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு
எய்தி
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, |
10
|
கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு, 'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி; நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, |
15
|
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான்
நாணி,
என ஆங்கு, இனையன தீமை நினைவனள் காத்தாங்கு, அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள் அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் |
20
|
மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே.
|
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?