நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 25 October 2015

குறிஞ்சிக்கலி 6



குறிஞ்சிக்கலி  6

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி.........................
Image result for தலைவி 
பல்வேறு தடைகளையும் தாண்டி ஒரு தலைவனும், தலைவியும் மணமுடித்துக்கொள்கின்றனர். தலைவனுடன் குறிஞ்சி மலையில் இனிதே இல்லறம் நடத்துகிறாள். ஆனால் தலைவன் அரசு வேலை காரணமாக வெகு தொலைவிலுள்ள நாட்டிற்குச் சென்றிருந்தான்.
அவன் அலுவலோ விரைவாக முடியவில்லை. கடமையை விடுத்து ஊர் திரும்பவும் மனம் வரவில்லை. தலைவி விரைவில் வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவனை நாள்தோறும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நாட்கள் நகர்கின்றன. அவன் வரும் வழிதான் தெரியவில்லை. அவள் தலைவனை நினைத்து ஏங்கினாள். மனம் வாடினாள். அலங்கரிக்கவும் மறந்து போனாள். தண்ணீர் எடுக்கையில் நீரில் தன்னைப் பார்த்தாள். மேனி இளைத்திருந்தது. கண்கள் சோர்ந்திருந்தன. முகம் களையிழந்திருந்தது. அங்கிருந்த பாறையொன்றில் அப்படியே அமர்ந்து விட்டாள். சிந்தனையிலாழ்ந்து விட்டாள். சிந்தனையில் என்ன தோன்றியது இதோ பின்னோக்கிப் போகலாம் வாருங்கள்.
திருமணத்திற்கு முந்தைய நாட்கள் களவு மணத்தில் இருந்த நாட்கள். இதுபோலத்தான் தலைவன் நெடுநாட்களாக வரவில்லை. மேனி இளைத்துப் போனது. கண்கள் சோர்ந்து போயிருந்தன. முகம் களையிழந்திருந்தது. சரியாக உண்ணவும், உறங்கவும் முடியாமல் பசலை நோயினால் வாடிப் போயிருந்தாள் தலைவி. அவளுடைய உயிர்த் தோழிக்கு தலைவியின் நிலை கண்டு கோபம் வருகிறது. அவள் கோபம் தலைவன் மீது பாய்கிறது.
தலைவியை வேறு சில வேளைகளில் ஈடுபடச் செய்ய நினைக்கிறாள். அக்காலத்துப் பெண்கள் உழைப்பதன் மூலமே தங்கள் கவலையை மறந்திருந்தனர். தோழியும் சந்தன உரலில், யானைக் கொம்பு உலக்கையைக் கொண்டு தினையிடிக்க வருமாறு அழைக்கிறாள். தலைவியும் ஒப்புக்கொண்டு தினையடிக்க வருகிறாள். அவளிடம் ஒரு உலக்கையைக் கொடுக்கிறாள் தோழி. இருவரும் இடிக்கின்றனர். ஆனால் தலைவி சிந்தனையிலாழ்ந்தபடியே உலக்கையை குற்றுகிறாள். அவள் கவனத்தைத் திசைதிருப்ப தோழி ஒரு வழி காணுகின்றாள்.
தோழி, உரத்தக் குரலில் பாடிடுவோமா? என்றாள். தலைவியும் அகவினம் பாடுவோம் என்றாள்.Image result for தலைவி
தோழி தலைவிக்கு பசலை நோய் கொடுத்த தலைவனைப் பழித்துரைத்துப் பாடுகிறாள்.
முந்தையப் பாடல்களில் தலைவி பழித்துரைப்பாள். தோழி புகழ்ந்துரைப்பாள். ஆனால் இப்பாடலில் தோழி பழித்துரைக்கிறாள். தோழி தன் காதலனை விட்டுக் கொடுக்காமல் புகழ்ந்து பாடுகிறாள். இதோ அந்த அகவினம்,( அகவினம் எனில் உரத்துப் பாடுதல் என்று பொருள்).

தோழி:     உன்தூக்கம் பறித்தவனின் மலையென்ன மலையோ
            நாணமில்லா இரக்கமில்லா மன்னவனும் இவனோ
           அருவி பேரிரைச்சலில் உறங்கினானோ இவனும்
           யானைத் தூக்கம் தூங்கினானோ உன்னவனும் இன்னும்

தலைவி:   தான் விரும்பிய பெண்ணை மனம் வாட விடுவானோ?
           தராசுமுள்போல் அறவுணர் உடையவனும் அவனே
           கோங்க மலர் பூத்திருக்கும் மலை பெரிய மலை
           பொன்னன்ன மனம் படைத்த மன்னவனும் அவனே

தோழி :    முறம் போன்ற பெருஞ்செவி படைத்த யானை
           மலைநாடன் மலையிலுள்ள மிகப்பெரிய யானை
           வீரத்துடன் புலியை அடித்துக் கொன்ற யானை
           மலையருவி நீர்குடித்து மகிழ்ந்த நல்யானை


தலைவி 2. மலர் சூடிய யானைபோல் மணக்குமந்த மலையே
           மன்னவன் சொல்போல் உயர்ந்து நிற்கும் மலையே
           மனம் கொண்ட காதலியை கைவிடவும் மாட்டான்
           மனம்மாறா இதயமுள்ள கடமையாளன் அவனே


தோழி      மலையெங்கும் எதிரொலிக்கும் மலையருவி ஓசை
            மறந்துதான் போனானோ மன்னவனும் ஆசை
            அயலவர்தான் எழுப்புகிறார் ஊரெங்கும் அலரோசை
            அருளில்லா தலைவனுக்கு வந்தால் உண்டு பூசை



தலைவி .  மன்னவனை வீணாக பழிபோட வேண்டாம்
            மனம்படைத்த மன்னவனும் பெருவீரன் தானே
           அறனிலி அல்லன் என்நெஞ்சக் கள்வன்
           வருவார்க்கு தருவான்தேரே மலைநீரினும் தூயன்

தோழி:     களைப்பு நீங்க மலையருகே படுத்ததிந்த யானை
           மலையருவி தாலாட்டு உறங்குமிந்த யானை
           மலைநாடன் மலைநாட்டில் உறங்குமிந்த யானை
           வன்நெஞ்சன் உன்மன்னன் அறியானா இவ்யானை
           மலைநாடன் மலையருவி பெண்களின் கண்ணீர்
           நாணழிய வைத்தான் நாணமில்லா மன்னன்
           அலர் சொல்லுக்குனை ஆளாக்கி வைத்தான்
           யானையின் உறக்கம்கூட உனக்கிங்கு இல்லை


தலைவி: தோழி போதும் நிறுத்து. தலைவனை இனி வசை பாடாதே. செவிகளில் வேலைப் பாய்ச்சாதே.

தோழியும் பாடலை நிறுத்தி விட்டாள். அப்போது தலைவியின் பின்னிருந்து மறைந்திருந்த தலைவன் அவளை அணைத்துக் கொள்கிறான். தலைவி தலைவன் என அறிந்து மகிழ்ந்து போனாள். தோழி கொல்என சிரித்தாள். அப்போதுதான் தலைவி அறிந்தாள். முன்பே வந்திருந்த தலைவன் தோழியிடம் பேசாமலிருக்கும்படி சைகை செய்துள்ளான். தோழியும் வேண்டுமென்றே தலைவனை பழித்துப் பாடியுள்ளாள். தலைவி இதை அறியாமல் பாடிக்கொண்டே இருந்திருக்கிறாள்.
 Image result for தலைவி 

அன்று எதிர்பாராமல் தலைவன் வந்து பின்னால் நின்று அணைத்துக் கொண்டான். ஆனால் இப்போது அந்தத் தலைவன் எப்போது வருவானோ? என ஏங்கி நின்றாள் தலைவி. அருகில் ஆறுதல் சொல்ல தோழியும் இல்லை.

 இதோ குறிஞ்சிக் கபிலரின்  அப்பாடல்


'மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த
முறம்செவி வாரணம் முன் குளகு அருந்தி,
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்
பிறங்கு இருஞ் சோலை நல் மலை நாடன்
மறந்தான்; மறக்க, இனி; எல்லா! நமக்குச்
5
சிறந்தன நாம் நன்கு அறிந்தனம், ஆயின்; அவன் திறம்,
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்,
வள்ளை அகவுவம், வா' 'இகுளை! நாம்
வள்ளை அகவுவம், வா'
காணிய வா வாழி, தோழி! வரைத் தாழ்பு
10
வாள் நிறம் கொண்ட அருவித்தே, நம் அருளா
நாணிலி நாட்டு மலை;
ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ
ஓர்வு உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்;
15
தண் நறுங் கோங்கம் மலர்ந்த வரையெல்லாம்
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? தன் மலை
நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
20
தேர் ஈயும் வண் கையவன்;
வரைமிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று;
எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி
25
அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன், என்
நெஞ்சம் பிணிக்கொண்டவன்;
என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்,
தாழ் இருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா,
சாயல் இன் மார்பன் சிறு புறம் சார்தர,
30
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என்
ஆயிழை மேனிப் பசப்பு.


2 comments:


  1. சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  2. கதை இனிதாக இருந்ததது

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?